புதன், 18 நவம்பர், 2009

வியாழன், 29 அக்டோபர், 2009

தொட்டு விடும் தூரத்தில்....


எனது புதிய தொகுதி அச்சில்...


(எனது "சிரட்டையும் மண்ணும்" என்ற தொகுதியிலிருந்து...)

தொட்டு விடும் தூரத்தில்
வாழ்க்கையிருக்கு..
அதை பெற்றுவிட
தயக்கம் இன்னும் எதற்கு

கற்று விட நிறைய
மீதமிருக்கு...
கற்பனையில் வாழ்தல்..
சுத்தக்கிறுக்கு...

அற்புதங்கள் நிறைய
மிச்சமிருக்கு...
அத்தனையும் தெரிந்தால்
அச்சம் எதற்க்கு

புத்தகங்கள் நிறைய
மூடிக்கிடக்கு..
புத்திமதி அதற்குள்
கொட்டிக்கிடக்கு...

சின்னச்சிறு உளிதான்
சிற்பம் செதுக்கும்..
சித்திரத்துக்குள்ளும்.
பல நுட்பமிருக்கும்

கொட்டிவிடும் இலைகள்
கோடை வெயிலில்-பின்னர்
பட்டையிலும் பசுமை
மாரி மழையில்.

எட்டி விட முடியாமல்
என்ன இருக்கு..
எச்சில் வலைதானே
சிலந்தி பின்னியிருக்கு..

எட்டி வைக்கும் போதுகளில்
பாதம் சறுக்கும்..
ஏற்றம் உள்ள பாதைகளில்
பள்ளம் இருக்கும்.

வெற்றி பெரும் மனது
வேண்டியிருக்கு
தோல்விகளில் கூட
பல பாடமிருக்கு.

வியாழன், 22 அக்டோபர், 2009

நேர்காணல்-கவிஞர் சுகிர்தராணி.

கவிஞர் சுகிர்தராணி-நம் நவீன தமிழ் இலக்கிய உலகில் சில அதிர்வுகளின் அடையாளம்.

"கைப்பற்றி என் கனவுகேள்", "இரவு மிருகம்" "அவளை மொழிபெயர்த்தல்" ஆகிய மூன்று தொகுதிகளாக அவருடைய கவிதைகள் வெளியாகியுள்ளன. பிறப்பினால் தலித்தாக அறியப்படும் சுகிர்தராணியின் கவிதைகள் இன்று பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளன. பெண் உடல் மொழி பற்றியும், தலித் விடுதலை பற்றியும் இவர் எழுதிய கவிதைகள் தமிழ் இலக்கிய உலகில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுபவை.
----------------------------------------------------------------------------------------------------------------------
"என் கண்களின் ஒளிக்கற்றைகள்
முன்னறையில் உறங்குபவனின்
ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன.
கோப்பை நிறைய வழியும் மதுவோடு
என்னுடல் மூழ்கி மிதந்தது.
கூசும் வார்த்தைப் பிரயோகங்களை
சன்னமாய் சொல்லியவாறு
சுயபுணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை
பறவைகளின் சிறகோசை கேட்டதும்
என்னை என்னிடத்தில் போட்டுவிட்டு
ஓடிவிட்டது இரவு மிருகம்"

என்பதைப் போல உடல் மொழி கவிதைகளையும்

"செத்துப்போன மாட்டைத்
தோலுரிக்கும்போது
காகம் விரட்டுவேன்
வெகு நேரம் நின்று வாங்கிய
ஊர்ச் சோற்றைத் தின்றுவிட்டு
சுடுசோறெனப் பெருமை பேசுவேன்
தப்பட்டை மாட்டிய அப்பா
தெருவில் எதிர்ப்படும்போது
முகம் மறைத்துக் கடந்துவிடுவேன்
அப்பாவின் தொழிலும்
ஆண்டு வருமானமும்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடி வாங்குவேன்
தோழிகளற்ற
பின் வரிசையிலமர்ந்து
தெரியாமல் அழுவேன்
இப்போது
யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்று சொல்லிவிடுகிறேன்
பறச்சி என்று"

என்கிற தலித்தியம் சார்ந்த கவிதைகளையும் மிகவும் துணிச்சலாகவே எழுதி ஒரு பெரும் கவனிப்புக்கு உள்ளாகி இருப்பவர் சுகிர்தராணி.

--நன்றி
அதிகாலை.காம் and www.kavimathy.blogspot.com

செவ்வாய், 20 அக்டோபர், 2009

ஞாயிறு, 18 அக்டோபர், 2009

மவுனம் உடைத்து பேசுகிறேன்....

என் மனசு சிறகு கட்டி பறந்த அந்த நாட்களைப் பற்றி நான் நினைத்துப் பார்க்கிறேன், என்னை தோள்களில் சுமந்த புழுதி படிந்த என்தெருக்கள். வாசனை வீசிக்கொண்டே வசீகரமாய் காட்சி அளித்த என்முற்றத்து மல்லிகை, என்பின்னேரங்களை, இன்பமாக்கிய நண்பர்கள், நான் குதுகளித்து மகிழும் எங்களூர் மலை உச்சி, காலாற நடந்து நட்புக்கொண்டாடிய அந்த நீண்ட குளக்கட்டு, அவ்வப்போது நண்பர்களுடனான படகுப் பயணம், மீன் பிடித்து மகிழ்ந்த அந்த மீளாத நிமிசங்கள், அப்பப்பா .... சொல்லி சுகம் காண முடியாத அற்புதப் பொழுதுகள் அவை, இன்னும் இன்னும் மனது சேமித்து ஆனந்தப் படும் அழியாத அனுபவங்கள்,

இன்றுகள். இறுக்கமான நாட்கள் எதையும் நின்று அவதானித்து ரசிக்கின்ற மனோபாவம் மறைந்து போய்விட்ட பொழுதுகள் இவை, ஒரு புன்னகையை உதிர்ப்பதட்கும் நேரமில்லாத வாடகை வாழ்க்கை, நவீனம் ..... நல்லதுதான்
நிம்மதியையும் சந்தோசத்தையும் நாம் அடகு வைத்துத்தான் நாம் அனுபவிக்க வேண்டியுள்ளது, நவீனத்தை......
இந்த பரபரப்புகளுக்குள் தான் நமது கூர்மையான பார்வையின் பிரதியீடாக இலக்கியப் புலத்தை, அல்லது படைப்பு தளத்தை நாம் தெரிவு செய்துள்ளோம், அன்ராடங்களில், நமது சூழலில் நாம் சந்திக்கின்ற,அனுபவக் கலவையின் வெளிப்பாடுகளை ஜீரணிக்க முடியாமல் தான் ஏதொ ஒரு வகையில் இறக்கி வைக்கிறோம், மனித அவலங்கள் முடிவுக்கு வரும் ஒரு நாளில் இந்தப் புலம்பல்களுக்கு அவசியமற்றுப் போகலாம் அது வரைக்கும்...........
வாருங்கள் கை கோர்ப்போம் உறுதியான கொள்கையுடன்...

என்றும் அன்புடன்,
நாச்சியாதீவு பர்வீன்.